Trust & Safety
சிம் மாற்ற மோசடிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
PhonePe Regional|2 min read|30 August, 2019
தெரியாத எண்ணிலிருந்து உங்களை அழைப்பார்கள், உங்கள் வங்கியின் பிரதிநிதி என்று கூறுவார்கள், நீங்கள் சற்றுமுன் பெற்ற OTP எனப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லைப் பகிரும்படி கேட்பார்கள். இவை அனைத்தும் உங்கள் பணத்தைத் திருடுவதற்காக மோசடிக்காரர்கள் செய்யும் சூழ்ச்சிகள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் பல்வேறு சூழ்ச்சி முறைகளைத் தெரிந்துகொள்ளவும், உங்களிடம் ஒருவர் சூழ்ச்சி செய்ய முயற்சிக்கிறார் என்பதை அறிந்து அதைத் தடுப்பதற்கும் இந்தக் கட்டுரை உதவிகரமாக இருக்கும்.
மோசடி மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு குறித்த தொடரின் ஒரு பகுதியாக, பல்வேறு சூழ்ச்சிகள் மற்றும் மோசடிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
சிம் மாற்ற மோசடி என்பது என்ன?
மோசடிக்காரர்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் எண்ணைக் கொண்ட புதிய சிம்மை வாங்குவார்கள். இதன் மூலம், உங்கள் வங்கிக் கணக்கில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதற்கான OTP-க்களை அவர்களால் அணுக முடியும்.
அதாவது, உங்கள் OTP-க்களை பயன்படுத்தி அவர்களால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருட முடியும்.
முக்கியக் குறிப்பு — ரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களை PhonePe ஒருபோதும் கேட்பதில்லை. Phonepe.com டொமைனில் இல்லாமல் வேறு டொமைனிலிருந்து PhonePe அனுப்பியதாக வரும் மின்னஞ்சல்களைத் தவிர்க்கவும். அத்தகைய மின்னஞ்சல்கள் மோசடியானதாக இருக்கும் என நீங்கள் கருதினால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
சிம் மாற்ற மோசடி எவ்வாறு நடைபெறும்?
- மோசடிக்காரர்கள் உங்களை அழைத்து, உங்கள் சிம் நிறுவனத்தின் பிரதிநிதி போன்று பேசி, உங்கள் நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்காக எஸ்.எம்.எஸ் ஒன்றை ஃபார்வேர்டு செய்யும்படி கூறுவார்கள். அந்த எஸ்.எம்.எஸில், அவர்கள் வாங்கிய புதிய சிம்மின் பின்புறத்தில் உள்ள 20 இலக்க எண் இருக்கும். சில சமயங்களில், ரகசியமான உங்கள் வங்கி விவரங்களையும் கேட்பார்கள்.
- அவர்கள் கேட்டபடி அந்த எஸ்.எம்.எஸை அவர்களுக்கு நீங்கள் ஃபார்வேர்டு செய்தால், நீங்கள் தற்போது பயன்படுத்தும் சிம் முடக்கப்படும். அத்துடன், மோசடியாளர்கள் சட்டவிரோதமாக வாங்கியுள்ள புதிய சிம் இயக்கப்படும். உங்கள் சிம் வேலைசெய்யாமல் போவதுடன், அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்படும்.
- இதன் மூலம், மோசடிக்காரர்கள் உங்கள் மொபைல் எண் மற்றும் எஸ்.எம்.எஸ் ஆகியவற்றுக்கான அணுகலைப் பெற்று, உங்கள் வங்கி விவரங்களைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றத்தைத் தொடங்குவார்கள்.
- பின்னர், மோசடியாளர்கள் வாங்கியுள்ள புதிய சிம்மில் அந்தப் பரிமாற்றத்திற்கான OTP-ஐப் பெற்று, உங்கள் கணக்கிலிருந்து அவர்களது கணக்கிற்குப் பணத்தை மாற்றிக்கொள்வார்கள்.
எந்தவிதக் காரணமுமின்றி நீண்ட காலத்திற்கு உங்கள் மொபைல் இணைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தால், ஏதோ தவறாக நடந்துள்ளது என்பதற்கு அது அறிகுறியாகும். அத்தகைய சூழலில், உடனடியாக உங்கள் சிம் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளவும்.
பாதுகாப்பாக இருப்பதற்கான சில குறிப்புகள் இதோ:
- உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை (கார்டு எண், காலாவதித் தேதி, ரகசிய பின்) எவருடனும் பகிர வேண்டாம்.
- உங்கள் வங்கி அல்லது சிம் நிறுவனம் அனுப்பியதாக ஏதேனும் மின்னஞ்சல்கள் அல்லது எஸ்.எம்.எஸ்களைப் பெற்றால், அவை அதிகாரப்பூர்வமான எஸ்.எம்.எஸ் தொடர்புவழி/மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்துள்ளதா எனப் பார்க்கவும்.
- எஸ்.எம்.எஸ் அல்லது பிற வழிகளில் பெறும் OTP-க்களை எவருடனும் பகிர வேண்டாம்.
- உங்கள் கணக்கிலிருந்து செய்யும் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கண்காணிக்க, எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் விழிப்பூட்டல்களுக்குப் பதிவுசெய்யவும்.
- ஏதேனும் தவறு நிகழ்ந்துள்ளதா என அவ்வப்போது உங்கள் வங்கிப் பரிவர்த்தனை வரலாற்றில் பார்க்கவும்.
இந்தத் தொடரின் அடுத்த கட்டுரை வரும்வரை காத்திருக்கவும்!
பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்வது குறித்த வீடியோவைப் பாருங்கள்: https://youtu.be/I2GNsUAS0GY