Investments
உங்கள் மாத சம்பளத்திலிருந்து போதுமான அளவு முதலீடு செய்கிறீர்களா?
PhonePe Regional|2 min read|11 June, 2021
எனது மாத வருமானத்தில் எத்தனை சதவீதம் நான் முதலீடு செய்ய வேண்டும்? இந்த கேள்வியை நீங்கள் பலமுறை கேட்டிருக்கலாம். இந்த யோசனை பலரின் மனதில் வருகிறது. இந்த கேள்வி இயற்கையாகவே முதலீட்டின் ஆரம்ப கட்டங்களில் எழுகிறது.
ஆனால் இந்த கேள்விக்கு ஒரு உறுதியான பதில் இல்லை. இது நபருக்கு நபர் மாறுபடும். ஆனால், உங்கள் முதலீட்டு இலக்கை அடைய, நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான உதவிக்குறிப்புகளை நாங்கள் நிச்சயமாக உங்களுக்கு வழங்க முடியும்.
சுலபமாக புரிந்துகொள்ள கிரிக்கெட்டின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்!
50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்யும் அணி போட்டியை வெல்வதற்கு எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும், ரன் வீதம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை சரியாக தீர்மானிக்க முடியாது.
இருப்பினும், போட்டியை வெல்வதற்கு அவர்களின் இன்னிங்ஸில் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச ரன் வீதத்தை அவர்கள் மதிப்பிடுகிறார்கள் (ஓவருக்கு 5–6 ரன்கள்) (அதிக ரன்ரேட் இருந்தால், வெற்றிபெறும் வாய்ப்பும் அதிகம்).
அதேபோல், நீங்கள் உங்கள் 20 களில் அல்லது 30 களின் முற்பகுதியில் இருக்கும்போது, உங்கள் நீண்டகால நிதி இலக்குகளைப் பற்றிய தெளிவான யோசனை உங்களுக்கு இருக்காது. ஏனென்றால் அந்த குறிக்கோள்கள் உங்கள் வாழ்க்கை முறை, வருமானம் மற்றும் குடும்ப லட்சியங்களின் அடிப்படையில் காலப்போக்கில் உருவாகின்றன.
உங்கள் நிதி முதலீட்டு இலக்கு தெளிவாக இல்லாவிட்டாலும், உங்கள் முதலீட்டை நீங்கள் இன்னும் தொடங்கலாம். நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு குறிப்பிட்ட முதலீட்டு வீதத்தைத் தேர்வு செய்யலாம்- பொதுவாக, உங்கள் மொத்த வருமானத்தில் 30–40% முதலீடு செய்வது ஆரோக்கியமான முதலீடாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பேட்ஸ்மேன் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுக்க முடியாமல் போகலாம். அதுபோல, நீங்கள் எப்போதும் 30–40% ஐ சேமிக்க முடியாமல் போகலாம், அது ஒரு பிரச்சனையல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு நிலையான முதலீட்டை வைத்திருப்பது தான் அடிப்படை குறிக்கோள். மேலும், உங்கள் தற்போதைய நிதி நிலைமை உங்களை மேலும் சேமிக்க அனுமதித்தால் (50% என்று வைத்துக்கொள்வோம்), அவ்வாறு செய்யுங்கள், ஏனெனில் எதிர்காலத்தில் நீங்கள் 30–40% முதலீட்டு வீதத்தை பராமரிக்க முடியாமல் போகலாம்.
கூட்டு சக்தியின் காரணமாக இளம் வயதிலேயே செய்யப்படும் நீண்டகால முதலீடுகள் செல்வத்தை சேர்ப்பதற்கான உங்கள் பயணத்திற்கு கூடுதல் மதிப்பைக் கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், (இதைப் பற்றி இந்த வலைப்பதிவில் மேலும் படிக்கவும்)
கிரிக்கெட்டின் உதாரணத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்போம். ஆனால் இம்முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் உங்கள் அணி பேட்டிங் செய்யப் போகிறது. இப்போது பேட்ஸ்மேனுக்கு எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்த துல்லியமான யோசனை இருக்கும், அதன்படி ரன் வீதத்தை நிர்ணயிப்பதன் மூலம் இலக்கை அடைய முயற்சி செய்யலாம்.
இதேபோல், நீங்கள் 30களின் நடுப்பகுதி மற்றும் அதற்கு மேல் செல்லும்போது குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளைப் பற்றிய சிறந்த பார்வை உங்களுக்கு இருக்கும். நிதி இலக்குகள் குறித்த இந்த தெளிவு, உங்கள் ரிஸ்க் ப்ரொஃபைல் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருவாய் விகிதத்தை கருத்தில் கொண்டு, அந்த நிதி இலக்குகளை அடைய நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகையை தீர்மானிப்பதை எளிதாக்கும். எடுத்துக்காட்டாக, நிதி பாதுகாப்பை அடைய, ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பது, குழந்தையின் எதிர்காலத்தைத் திட்டமிடுவது, கார் வாங்குவது போன்ற குறிக்கோள்கள் இருக்கலாம். (ஒரு தனி வலைப்பதிவில் நிதி நோக்கங்களின்படி முதலீடு செய்வது பற்றி காண்போம்.) இந்த ஒவ்வொரு குறிக்கோளுக்கும் நீங்கள் சில வழக்கமான முதலீடுகளைச் செய்ய வேண்டும், மேலும் இதுபோன்ற அனைத்து வகையான முதலீடுகளும் சேர்ந்து உங்கள் ஒட்டுமொத்த இலக்கை அடைய உதவுகின்றன.
கடைசியாக, நீங்கள் முதலீடு செய்யத் தொடங்குவதை உறுதி செய்வது முக்கியம். இது உங்கள் வருமானத்தில் 20%, 30% அல்லது 50% ஆக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கியதும், உங்கள் செல்வத்தை உருவாக்கும் பயணத்தில் முன்னேறும்போது நீங்கள் முதலீடு செய்யும் தொகையை எப்போது வேண்டுமானாலும் சரிசெய்யலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.